காவல்துறையினரின் வாகன சோதனையில் வெடிகுண்டு மற்றும் நாட்டுத் துப்பாயுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தோஷபுரம் பகுதியில் இருக்கும் சமுதாய நலக்கூடம் அருகாமையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்நேரம் அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் வந்த ஏழு பேரும் காவல்துறையினரை கண்டதும் வாகனங்களை திருப்பிக் கொண்டு தப்பி செல்ல முயற்சி செய்ததை பார்த்த காவல்துறையினர் அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்துள்ளனர். அதன்பின் அவர்களை விசாரணை செய்ததில் அவர்கள் ஹரி பிரசாத், பாரதி, கீர்த்தி ராஜன், விஸ்வநாதன், நாகராஜ், மணிகண்டன் மற்றும் யுவராஜ் என்பது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து அவர்களை சோதனை செய்ததில் பாரதி என்பவரிடம் ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிகுண்டு இருந்தது. பிறகு ஹரி பிரசாத்திடம் கஞ்சாவும் மற்றும் யுவராஜிடம் கத்தியும் இருந்துள்ளது. இதை காவல்துறையினர் பறிமுதல் செய்து ஏழு பேரை கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பாரதி என்பவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சியில் 4 வழக்குகளும், ஹரி பிரசாத் மற்றும் யுவராஜ் ஆகியோர் மீது தலா 2 கொலை முயற்சி வழக்கும், 2 சண்டை வழக்குகளும், நாகராஜன் என்பவர் மீது 4 சண்டை வழக்குகளும், 2 கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.