திண்டிவனம் அருகே கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி கார் மீது மோதிய விபத்தில் 1 ½ வயது குழந்தை உட்பட 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ் ஒன்று திண்டிவனம் சாலையில் நேற்றைய தினம் சென்றுகொண்டிருந்தது. அப்போது அதிவேகமாக சென்ற பஸ் பிரேக் பிடிக்காமல் முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது வேகமாக மோதியது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு எதிர்திசை ரோட்டில் நுழைய சென்னையிலிருந்து துறையூர் நோக்கி குடும்பத்துடன் வந்து கொண்டிருந்த ஒரு கார் மீது மோதி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் கார் பலத்த சேதம் அடைந்து அதிலிருந்த தேவேந்திரன், திவ்யபிரியா மற்றும் அவரது ஆறு மற்றும் ஒன்றரை வயது குழந்தைகள் படுகாயமடைந்தனர். பின் விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கும் காவல் நிலையத்திலும் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் 4 பேரையும் சிரமப்பட்டு மீட்டு மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.