ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் பஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வது மத்திய, மாநில அரசுகளின் முக்கியமான கடமையாக இருக்கிறது. இந்த போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வது ஒரு கடமை என்றால், அதற்கான எரிபொருளை பெறுவது மற்றொரு சவாலாக இருக்கிறது. இந்த எரிபொருளை ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் அந்நிய செலவாணி கச்சா எண்ணெய்யிலே அதிக அளவில் செலவாகி விடுகிறது. இந்நிலையில் பெரும்பாலும் வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருளை நிரப்பப்படுகிறது. இதில் குறிப்பாக டீசலால் இயங்கும் வாகனங்கள் அதிக அளவு கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவதால் சுற்றுச்சூழலும் மாசடைகிறது.
இந்த எரிபொருள் தேவையை சமாளிப்பதற்காகவும் , சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதற்காகவும் அரசாங்கம் மின்சார வாகனங்களுக்கு அனுமதி அளித்தது. அந்த வகையில் தற்போது புதிதாக ஹைட்ரஜன் எரிபொருளை கொண்டு இயங்கும் பஸ் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பஸ்ஸில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் கலந்த காற்றை பயன்படுத்தி மின்சாரம் தயாரித்து எரிபொருளாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பஸ்ஸை புனேவில் இன்று முதன் முதலாக மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணைஅமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். மேலும் பெட்ரோல், டீசலை விட ஹைட்ரஜன் எரிபொருள் விலை குறைவு என்பதால் இனி வரும் காலங்களில் அதிக அளவில் ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் வாகனங்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.