Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான்: “இம்ரான் கான் மீதான வழக்கு”…. இன்று ஐகோர்ட்டில் விசாரணை….!!!!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும்,பி.டி.ஐ கட்சி தலைவருமான இம்ரான்கான் பெண் நீதிபதி ஒருவரை மிரட்டியதாக புகார் பெறப்பட்டது. இஸ்லாமாபாத்தில் சென்ற சனிக்கிழமை நடந்த பொதுக் கூட்டத்தில் இம்ரான்கான் பேசியதாவது, காவல்துறையினரால் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தன் ஆதரவாளரான ஷாபாஸ் கில்லை உடனே விடுதலை செய்ய வேண்டும். அத்துடன் கில் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். அதுமட்டுமல்லாமல் தன் கட்சி தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காக போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஷாபாஸ் கில்லை போலீஸ் காவலில் அடைக்க உத்தரவு பிறப்பித்த பெண் நீதிபதி போன்றோரை மிரட்டும் விதமாக பேசினார். அவரது உரை நாடு முழுதும் செய்தி சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பாகியது.

இந்த சூழ்நிலையில்இம்ரான்கானின் உரையை அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் நேரலையில் ஒளிபரப்ப பாகிஸ்தான் ஊடக அமைப்பு தடைவிதித்தது. இதற்கிடையில் இம்ரான்கான்மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் (ஏடிஏ) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பின் இம்ரான்கான் மீதான வழக்கை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. அவர மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு முடிவு செய்து இருப்பதாக தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் முன் ஜாமின் கோரி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் இம்ரான்கான் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இம்ரான்கானுக்கு வருகிற 25 ஆம் தேதி வரை முன்ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது பற்றி பாகிஸ்தான் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு மந்திரி மரியம் அவுரங்கசீப் கூறியதாவத “பிடிஐ தலைவர் இம்ரான்கானை சிறையில் அடைத்து நேரத்தை வீணடிப்பதில் அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை. எனினும் இம்ரான்கானின் கைது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்தும் சட்டத்தின்படி நடக்க வேண்டுமே தவிர்த்து அரசியல் சுய நலத்திற்காக அல்ல. இதனிடையில் நாட்டின் முன்னேற்றத்திற்காக அரசு பாடுபடுகிறது” என்று கூறினார். இந்த நிலையில் இம்ரான்கான் கைதுக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் அதிபருமான ஆசிப்அலி சர்தாரி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். இந்த கைது ஆளும் கூட்டணிக்கு அரசியல் சேதத்தை ஏற்படுத்தும் என்று அவர் நம்புகிறார். இந்நிலையில் இம்ரான்கானை கைது செய்யும் நடவடிக்கையை முன்னாள் அதிபர் ஆசிப்அலி சர்தாரி எதிர்த்ததாக எழுந்த ஊகங்களையும் மந்திரி மரியம் அவுரங்கசீப் மறுத்துள்ளார். இருப்பினும் முன்ஜாமின் காலமான 25ஆம் தேதி நிறைவடைந்த பிறகு இம்ரான்கான் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |