தனது மகனுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக கூறி பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள செல்லங்குப்பம் சுனாமி நகரில் ரம்யா என்பவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஒரு மனுவை கொடுத்துள்ளார். அந்த மனதில் கூறியிருப்பதாவது, எனது மகன் சரண் சக்தி கடந்த மே மாதம் கீழே விழுந்துவிட்டான். அப்போது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் சரண் சக்தியை கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம். இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்து சக்தியின் கையில் பிளேட் வைத்தனர்.
அந்த பிளேட் அகற்றப்பட்ட பிறகு சக்தியின் கை கீழ்நோக்கி வளைந்த படி வளர்வதோடு, அந்த கையை அவனால் பயன்படுத்த இயலவில்லை. மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததால் தான் எனது மகனின் கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எனது மகனுக்கு உரிய சிகிச்சை அளித்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரம்யா புகாரில் குறிப்பிட்டுள்ளார்.