கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சங்குப்பம் செல்வ விநாயகர் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கடந்த ஜூலை மாதம் உண்டியலை உடைத்து பணத்தை திருட முயன்றனர். அப்போது அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். கடந்த 15-ஆம் தேதி மர்ம நபர்கள் பெண்ணையாறு ரோடு நாகம்மன் கோவில், புதுப்பாளையம் கங்கை அம்மன் கோவில், வினை தீர்த்த விநாயகர் கோவில் ஆகிய மூன்று கோவில்களின் உண்டியலையும் உடைத்து பணத்தை திருடிவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கும்தாமேடு தரைப்பாலம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார்(21) மற்றும் சக்தி(19) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர். இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாய் பணம் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.