பேருந்தின் மேற்கூரை வழியாக மழைநீர் ஒழுகுவதால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தரேவு, அய்யம்பாளையம், மஞ்சள்பரப்பு, தடியன்குடிசை உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் வழியாக வத்தலகுண்டுவில் இருந்து தாண்டிக்குடிக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று மதியம் வழக்கம் போல அரசு பேருந்து தாண்டிக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது மழை பெய்ததால் பேருந்தின் மேற்கூரை வழியாக மழைநீர் ஒழுகியது. இதனால் பயணிகள் மழை நீரில் நனைந்தபடி பயணம் செய்துள்ளனர்.
சிலர் பேருந்துக்குள் குடை பிடித்தபடி பயணம் செய்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, பெரும்பாலான பேருந்துகள் ஓட்டை, உடைசலுடன் இயக்கப்படுகிறது. இதனால் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே உரிய முறையில் பேருந்துகளை பராமரித்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.