கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் சென்ற ஜூலை 13ம் தேதி மாணவி ஸ்ரீமதியி உயிரிழந்தார். இதையடுத்து கடந்த மாதம் 17ம் தேதி பள்ளி அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டது. இதற்கிடையில் பள்ளி நிர்வாகம் சார்பாக நிர்வாகிகள் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் மற்றும் 2 ஆசிரியர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சூழலில் இறந்த மாணவியின் 2வது உடற்கூராய்வு அறிக்கையை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழுவினர் நேற்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர.
அத்துடன் ஸ்ரீமதியின் நெருங்கிய தோழிகள் 2 பேரிடம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் பெற்றார். இந்த நிலையில் இன்று தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மாணவியின் பெற்றோரான தந்தை ராமலிங்கம் மற்றும் தாயார் செல்வி ஜிப்மர் மருத்துவ பரிசோதனை அறிக்கையினை கேட்டு மனுதாக்கல் செய்தனர். அதன்பின் மாணவியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் பேசியதாவது, தங்களது மனு மீது விசாரணை மேற்கொண்டு மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கையை தங்களுக்கு தருமாறு மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும், வாக்குமூலம் பெறப்பட்ட 2 பேரும் உண்மையில் மாணவியின் தோழிகள் தானா என்பது தொடர்பாக தங்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமெனவும் கூறினார்.
அதனை தொடர்ந்து மாணவியின் தாய் செல்வி கூறியதாது “என் மகளின் இறப்பிற்கு நீதி வேண்டி எங்கள் சொந்த ஊரிலிருந்து வருகிற வெள்ளிக்கிழமை நடை பயணமாக சென்று தமிழக முதல்வரை நேரில் சந்தித்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என மனு கொடுக்க இருக்கிறோம். இதனிடையில் சக்திமெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும். சென்ற காலங்களில் இப்பள்ளியில் 7 கொலைகள் நடந்திருக்கிறது. தற்போது என் மகள் இறந்து 43 நாட்களாகியும் இதுவரையிலும் உண்மை தன்மை தெரியவில்லை. பள்ளி நிர்வாகத்திற்கு 90 % அரசு அதிகாரிகள் விலை போய் இருக்கின்றனர்” என்று கூறினார்.