அண்டை நாடான வங்கதேசம் தற்போது மின்சார பற்றாக்குறையால் திணறிக் கொண்டிருக்கின்றது. இந்த சூழலில் மின்சாரத்தை மிச்சப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பள்ளி கல்லூரிகளை வாரம் ஐந்து நாட்கள் மட்டும் இயங்கச் செய்யவும் சனி ஞாயிறு ஆகிய இரு நாட்கள் விடுமுறை எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவலை அமைச்சரவை செயலாளர் கண்டாகேர் அன்வருல் இஸ்லாம் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில் நாளை முதல் அனைத்து அரசு தன்னாட்சி அலுவலகங்களும் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செயல்படும் என வங்கிகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும் என மின்சார பயன்பாட்டை குறைத்துக் கொள்ளும்படி அனைத்து அலுவலகங்களும் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் அமைச்சரவை செயலாளர் அன்வருள் கூறியுள்ளார். மேலும் மின்சாரத்தை மிச்சப்படுத்தும் விதமாக ஏற்கனவே கடைகள் வணிக வளாகங்களை இரவு 8 மணிக்கு மூடிவிடும்படி வங்கதேச அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் இது தொடர்பாக வங்கதேச நாட்டின் கல்வித் துறை அமைச்சர் தி.பு மோனி பேசும்போது உலகளாவிய மின் நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பள்ளிகளுக்கு மாணவர்களை ஏற்று செல்லும் வாகனங்கள் அதிக அளவில் எரிபொருளை செலவழித்து வருகின்றது பள்ளியில் படிக்கும் நாட்களை குறைப்பதன் மூலமாக எரிபொருள் பயன்பாட்டை குறைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.