இந்தியாவில் 82க்கும் அதிகமான குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் நோய் ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தாக்கி வரும் இந்த நோய் பெரியவர்களையும் பாதிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறுமாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. தக்காளி காய்ச்சல் வைரஸ் மற்ற வைரஸ் தொற்றுகள் போன்ற அறிகுறிகளைக் காட்டினாலும், கொரோனா, குரங்கு அம்மை, டெங்கு அல்லது சிக்குன்குனியாவுடன் தொடர்புடையது அல்ல எனவும், காய்ச்சல் அல்லது சொறி அறிகுறிகள் உள்ள குழந்தைகளை கட்டிப்பிடிக்கவோ, தொடவோ வேண்டாம் என குழந்தைகளுக்கு அறிவுறுத்துமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரல் உறிஞ்சும் பழக்கத்தை நிறுத்த குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். மூக்கு ஒழுகுதல் அல்லது இருமல் ஏற்பட்டால் கைக்குட்டையைப் பயன்படுத்த குழந்தையை ஊக்குவிக்கவும் என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. குழந்தைகளின் தோலை சுத்தம் செய்யவோ அல்லது குளிக்கவோ எப்போதும் வெதுவெதுப்பான நீரை பயன்படுத்துமாறும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஊட்டச்சத்து நிறைந்த, சமச்சீரான உணவை எடுத்துக்கொள்ளுமாறும், போதுமான ஓய்வு, தூக்கம் அவசியம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.