Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நெய்வேலி போலீஸ் நிலையத்தில் வாலிபர் மரணம்…… கோர்ட் அதிரடி உத்தரவு…..!!!!

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் அருகில் உள்ள பி.என்.பாளையம் கிராமத்தில் சுப்பிரமணி(35) என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் நெய்வேலி 3-வது வட்டத்தை சேர்ந்த யூசுப் மனைவி மும்தாஜ் (47) என்பவரை கொலை செய்து, நகைகள் கொள்ளையடித்தார். இந்த வழக்கு குறித்து விசாரிப்பதற்காக சுப்பிரமணியை நெய்வேலி டவுன்ஷிப் போலீசார், போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் போலீஸ் நிலையத்தில் அவர் திடீரென உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் தான் சுப்பிரமணியை அடித்துக் கொலை செய்து விட்டதாகவும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில் நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல், போலீஸ்காரர் சவுமியன் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு, இது கொலையாகாத மரணம் என்று  வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடலூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு நடத்தும் நீதிமன்றமே முகாந்திரம் இருந்தால் கொலை மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை வழக்காக மாற்றிக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பினை கடலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதன்அடிப்படையில், கடந்த 4 ஆண்டுகளாக நடந்த இந்த மனுவின் மீதான விசாரணையில் நேற்று முன்தினம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தமராஜா உத்தரவு பிறப்பித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, செந்தில்வேல், சவுமியன் ஆகியோர் மீதான வழக்கை கொலை மற்றும் எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை பிரிவுக்கு மாற்றம் செய்யலாம் என்று உத்தரவிட்டார். இதுகுறித்து அரசு சிறப்பு வக்கீல் ஜீவக்குமார் கூறியது, கொலையாகாத மரணம் என்பது தற்போது கொலையாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி 3 போலீசார் மீதும் வழக்கு நடைபெறும். மேலும், அவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும், இதே நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும். அடுத்தக்கட்ட விசாரணை வருகின்ற 9-ந் தேதி நடைபெறும் என்று கூறினார்.

 

Categories

Tech |