கோவை, ஈச்சனாரி பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.. முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்து, 663 கோடி ரூபாயில் 748 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின், 1.07 லட்சம் பயனாளிகளுக்கு ரூ 588 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த விழாவில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின், மக்களுக்கு கணக்கில்லாத உதவிகளை திமுக அரசு செய்து வருகிறது.கோவை மாவட்டம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. கோவையின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். கோவையில் இதுவரை ரூ.1200 கோடிக்கு மேல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
கோவை என்றாலே பிரம்மாண்டம் தானே, தொழில் வளம் கொண்ட மாவட்டமாக கோவை விளங்கி வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து 15 மாதங்களில் கோவை மாவட்டத்திற்கு 5வது முறை வந்துள்ளேன்; இந்த மாவட்டத்தின் மீதும் மாவட்ட மக்களின் மீது வைத்துள்ள அன்பின் வெளிப்பாடு இது. என்ன செய்தோம் என கேட்பவர்களுக்கு இங்கு நான் கம்பீரமாக கூறிக்கொள்கிறேன். ஏதோ சிலருக்கு உதவிகளை செய்து கணக்கு காட்டுபவர்கள் நாங்கள் அல்ல” என்று தெரிவித்தார்.