நீல்சன் இந்தியா நிறுவனம் ஏரியல் சலவை தூள் நிறுவனத்துடன் இணைந்து ஒரு கருத்து கணிப்பை நடத்தியது. இந்த நிறுவனம் வீட்டு வேலை என்பது பெண்கள் மட்டும் தான் செய்ய வேண்டுமா? இல்லை எனில் வீட்டு வேலைகளை கண்டிப்பாக ஆண்களும் செய்ய வேண்டுமா? என்று கருத்து கணிப்பு நடத்தியது. இந்த கருத்து கணிப்பு பெங்களூர், ஹைதராபாத், டெல்லி, சென்னை மற்றும் மும்பை போன்ற பெரு நகரங்களில் 1000 பேரிடம் நடத்தப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் மும்பையில் உள்ள லோயர் பரேல் என்ற இடத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் ஷில்பா செட்டி, மந்த்ரா பேடி, நேகா தூபியா போன்றோர் கலந்து கொண்டனர். அப்போது மூன்றில் 2 பெண்கள் துணி துவைப்பது போன்ற வேலைகளை ஆண்களும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். அதன் பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டு வேலைகளையும் செய்வதால் மிகவும் சிரமத்திற்கு ஆளாவதாக கூறியுள்ளனர். இதில் குறிப்பாக வேலைக்கு செல்லும் 85 சதவீத பெண்கள் அலுவலகத்திலும் வேலை பார்த்துவிட்டு வீட்டிலும் வந்து வேலை பார்க்கின்றனர்.
இதன் காரணமாக ஆண்கள் துணி துவைப்பது, உணவு சமைப்பது, பாத்திரம் கழுவுவது உள்ளிட்ட வீட்டு வேலைகளில் உதவ வேண்டும் என 83% பெண்கள் நினைக்கின்றனர். ஆனால் 76% ஆண்கள் துணி துவைப்பது பெண்களுக்கான வேலை என்று கருதுகின்றனர். மேலும் நிகழ்ச்சியின் போது ஆண், பெண் என்ற வேறுபாடு கருதாமல் பெண்களுக்காக வீட்டு வேலையில் ஆண்களும் கண்டிப்பாக உதவ வேண்டும் என்று கூறப்பட்டது.