இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம்தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்தில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது. உள் நாட்டிலேயே கட்டப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் செப்டம்பர் 2ம் தேதி இந்தியக்கடற்படையில் இணையும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பல் ரூபாய். 20,000 கோடி செலவில் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. இதன் வாயிலாக விமானம் தாங்கிக் கப்பலை சொந்தமாகக் கட்டும் திறன் கொண்ட வெகுசில நாடுகளுடன் இந்தியாவும் இணைந்தது. 1,700 வீரர்கள் பயணிக்கும் வகையில் உருவாகி இருக்கும் இந்த கப்பலிலிருந்து மிக்- 29கே போா் விமானங்கள், கமோவ் – 31 ஹெலிகாப்டா்கள், எம்ஹெச் – 60ஆா் ஹெலிகாப்டா்கள் போன்றவற்றை இயக்கவும் தரையிறக்கவும் முடியும்.
அதிகபட்சம் 28 நாட்வேகத்தில் கப்பலை இயக்கலாம். இக்கப்பலில் 2 அறுவை சிகிச்சை அறைகள், 16 படுக்கைகள், பரிசோதனை மையங்கள், சிடி ஸ்கேன் வசதி என மினி மருத்துவமனையே இடம்பெற்று இருக்கிறது. மருத்துவப் பணிக்காக மட்டும் 5 மருத்துவ அதிகாரிகள் உட்பட 21 மருத்துவப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கின்றனர். ஈபிள் கோபுரம் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட இரும்புகளைவிட 4 மடங்கு இரும்புகள் விக்ராந்த் போர்க் கப்பல் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த கப்பலில் 2,400 கி.மீ. அளவுக்கு நீளம் உள்ள கேபிள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
இது சுமார் கொச்சியிலிருந்து தில்லி வரையிலான தூரம் ஆகும். ஒரு சிறிய நகரத்துக்கு தேவையான மின்சாரத்தை உருவாக்கும் திறன் இக்கப்பலுக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த ஐஎன்எஸ் விக்ராந்த்கப்பலின் முதலாவது சோதனை ஓட்டமானது சென்ற வருடம் ஆகஸ்ட் மாதத்தில் 5 நாட்களுக்கு நடைபெற்றது. அதன்பின் சென்ற அக்டோபர், ஜனவரி, ஜூலை மாதம் என மொத்தம் 4 சோதனை ஓட்டங்கள் நடைபெற்று இருக்கிறது. இந்த நிலையில் அந்த போர்க் கப்பலை வருகிற செப்- 2 ம் தேதி இந்திய கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சியானது கொச்சியில் நடைபெற இருக்கிறது எனவும் நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்று ஐஎன்எஸ் விக்ராந்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.