இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஒரு பெண் பள்ளிக்கு செல்லும்போதும், கல்லூரிக்கு செல்லும் போதும், வேலைக்கு செல்லும் போதும் பல்வேறு விதமான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார். இதன் காரணமாக பெண்களை பாதுகாப்பதற்காக பல்வேறு விதமான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது. இதில் ஒரு 10 சட்டங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.
உலக அளவில் 48 சதவீத பெண் குழந்தைகள் 18 வயது ஆவதற்கு முன்பாகவே பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். இந்த குழந்தை திருமணங்களில் இந்தியா 13-வது இடத்தில் உள்ளது. இந்த குழந்தை திருமணத்தை தடுப்பதற்காக கடந்த 2007-ம் ஆண்டு குழந்தை திருமண தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி 18 வயது பூர்த்தி செய்த பெண்கள் மற்றும் 21 வயது பூர்த்தி செய்த ஆண்களுக்கு மட்டுமே திருமணம் செய்து வைக்க வேண்டும்.
இந்தியாவில் பல்வேறு விதமான சமூகத்தினர் வசித்து வருவதால் ஒரு சமூகத்தை சேர்ந்த ஆணோ பெண்ணோ மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொள்வதற்கு உரிமை வழங்குதல், திருமணத்தை பதிவு செய்தல் மற்றும் விவாகரத்து வழங்குதல் போன்றவைகளுக்காக கடந்த 1954-ம் ஆண்டு சிறப்பு திருமண சட்டம் இயற்றப்பட்டது.
ஒரு பெண்ணை பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கும் போது மணமகன் வீட்டிற்கு வரதட்சனை கொடுப்பது இந்தியாவில் வழக்கமாக இருக்கிறது. இந்த வரதட்சணையால் ஒரு பெண் மாமியார் வீட்டில் பல்வேறு விதமான இன்னல்களுக்கு ஆளாகிறார். இதனால் வரதட்சணை கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக கடந்த 1961-ம் ஆண்டு வரதட்சணை தடை சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் படி வரதட்சணை வாங்குவதோ, கொடுப்பதோ சட்டப்படி குற்றமாகும்.
இந்தியாவில் திருமணம் செய்து கொண்ட 2 பேர் சேர்ந்து வாழ விரும்பாவிட்டால் விவாகரத்து செய்து கொள்ளலாம். இதற்காக கடந்த 1969-ம் ஆண்டு விவாகரத்து சட்டம் இயற்றப்பட்டது. பெண்களுக்கு மகப்பேறு காலங்களில் வேலை பார்க்கும் நிறுவனங்கள் விடுப்பு வழங்க வேண்டும் என்பதற்காகவும், மகப்பேறு காலங்களில் மருத்துவ சலுகைகள் வழங்க வேண்டும் என்பதற்காகவும் கடந்த 1861-ம் ஆண்டு மகப்பேறு நன்மை சட்டம் இயற்றப்பட்டது.
ஒரு பெண் கருவறும்போது அதை சட்டவிரோதமாக கலைப்பதால் தாய்-சேய் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக கடந்த 1971-ம் ஆண்டு மருத்துவக் கருவுறுதல் சட்டம் இயற்றப்பட்டது. பெண்கள் வேலைக்கு செல்லும் இடத்தில் பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாவதால் அதை தடுப்பதற்காக கடந்த 2013-ம் ஆண்டு பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் சட்டம் இயற்றப்பட்டது.
பெண்களை வைத்து தவறான விளம்பரங்கள் செய்தல், ஓவியங்கள் வரைதல், புகைப்படங்களை வைத்து தவறான முறையில் சித்தரித்தல் போன்றவற்றை தடுப்பதற்காக கடந்த 1986-ம் ஆண்டு பெண்கள் அநாகரிகமான பிரதிநிதித்துவம் தடுப்பு சட்டம் இயற்றப்பட்டது.
சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதற்காகவும் அவர்களுக்கான உரிமைகளை வாங்கிக் கொடுப்பதற்காகவும் கடந்த 1990-ம் ஆண்டு தேசிய மகளிர் ஆணையச் சட்டம் இயற்றப்பட்டது. மேலும் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஆண்- பெண் இருவருக்கும் சமமான ஊதியம் வழங்குவதை உறுதி செய்வதற்காக கடந்த 1976-ம் ஆண்டு சம ஊதிய சட்டம் இயற்றப்பட்டது.