கடந்த 2011 மார்ச் 30 சண்டிகர் விமான நிலையத்தில் காலை 6 மணிமுதல் அனைத்து பயணிகள் விமான சேவையும் நிறுத்தப்பட்டது. சுகோய் – 30 போர் விமானங்கள் அடிக்கடி வானில் வட்டமிட்டுக்கொண்டிருந்தது. அத்துடன் நகரின் முக்கியமான சாலைகளில் காவல்துறையுடன் கூடவே பாதுகாப்புப்படைகளும் நிறுத்தப்பட்டனர். அதுமட்டுமின்றி மொஹாலி கிரிக்கெட் ஸ்டேடியம் முதல் முறையாக இராணுவச் சாவடி போல் காணப்பட்டது.
ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பையின் அரை இறுதி, அதுவும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்தது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் அழைப்பின்படி பாகிஸ்தான் பிரதமர் யூசுப் கிலானியும் இஸ்லாமாபாத்திலிருந்து போட்டியைக் காணவும், மன்மோகனை அங்கு சந்திக்கவும் இந்தியா வந்தார். கடந்த 2007 டி20 உலகக்கோப்பையில் இருஅணிகளும் மோதிய ஆட்டத்தின் நினைவுகள் அனைவர் மனதிலும் பசுமையாக இருந்தது.
இந்தியா அதில் வெற்றிபெற்று கோப்பையை வென்றது. கால் இறுதியில் வலுவான ஆஸ்திரேலிய அணியை இந்தியா தோற்கடித்து விட்டது. குஜராத்திலுள்ள மோடேரா விளையாட்டு அரங்கில் அப்போட்டியை கவர் செய்த பிபிசி செய்தியாளர் முகேஷ் ஷர்மா “கவனித்துக் கொள்ளுங்கள், மொஹாலியிலும் இது தொடரவேண்டும்” என தொலைபேசியில் கூறினார். அப்போது பிபிசி ஹிந்தியின் கவரேஜ் பொறுப்பு பங்கஜ் பிரியதர்ஷி மற்றும் வந்தனா போன்றோரின் கைகளில் இருந்தது. உலகின் அனைத்து முன்னணி கிரிக்கெட் செய்தியாளர்களும் இப்போட்டிக்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது சச்சின் டெண்டுல்கரின் கடைசி உலகக்கோப்பை. அத்துடன் யுவராஜ் சிங் முதல் கோலி, கம்பீர் வரை அனைவருமே இந்த முறை சச்சினுக்காக கோப்பையை வெல்ல வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி, போட்டிக்கு முன் “நாங்களும் இப்போட்டியில் உயிரைக் கொடுத்து விளையாடுவோம்” என கூறினார்.
முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி சச்சினின் 85 ரன்கள் வாயிலாக 7 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து குவித்தது. அப்போது பாகிஸ்தானின் பீல்டர்கள் சச்சினின் நான்கு கேட்சுகளை தவற விட்டது அவரது அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம். அதன்பின் இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி இலக்கை எட்ட 29 ரன்கள் மீதம் இருந்த நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் அனைவரையும் ஆட்டமிழக்கச் செய்தனர்.
ஜாகீர், நெஹ்ரா, முனாஃப் படேல், ஹர்பஜன், யுவராஜ் போன்றோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இத்தோல்விக்கு ஒன்றரை மாதங்களுக்குப் பின் பாகிஸ்தான் கேப்டன் அஃப்ரிடி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட்டார். அதன்பின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார். இந்த உலகக்கோப்பைக்குப் பிறகு சச்சினும், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.