ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெற்ற போட்டியின் போது இந்திய அணியினை பாகிஸ்தான் வீழ்த்தியது. இந்த போட்டியின் போது இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியும், பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாமும் இருந்தனர். இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததற்கான 4 காரணங்கள் பற்றி பார்க்கலாம். அதாவது போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே இந்திய அணியினர் பாகிஸ்தான் அணி தோற்றுப் போவதற்கு எதற்காக விளையாட வேண்டும் என்று பல்வேறு விதமாக கேலி செய்தனர். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூட பாகிஸ்தான் அணியை கேலி செய்தார்.
அதோடு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் பாதுகாப்பு கருதி பாகிஸ்தான் நாட்டில் விளையாட மறுத்தது. இது பாகிஸ்தானுக்கு பேரிடியாக விழுந்தது. ஏனெனில் வலுவான அணிகளுடன் சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பாகிஸ்தான் அணி இழந்தது. இந்த நேரத்தில் இந்திய அணியும் பாகிஸ்தான் வீரர்களை கடுமையாக கேலி செய்யவே, பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் தொடரில் வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசு மழை என்று அறிவிக்கப்பட்டது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே இந்திய ரசிகர்கள் கண்டிப்பாக பாகிஸ்தான் அணியினர் தோற்று விடுவார்கள் என்று கொண்டாட ஆரம்பித்தனர். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் போட்டியின் முடிவு தெரிவதற்கு முன்பாகவே ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்க வேண்டாம் என இணையதளத்தில் பேட்டி கொடுத்தார்.
இப்படிப்பட்ட பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளில் தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி தொடங்கியது. இந்நிலையில் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததற்கான முக்கிய காரணம் டாஸ். இந்த போட்டியின் போது விராட் கோலி டாஸ் சுண்டினார். பாகிஸ்தான் அணியினர் டாசில் வெற்றி பெற்றதால் பந்து வீச்சை தேர்வு செய்தனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் நாங்கள் வென்று இருந்தால் பந்துவீச்சை தான் தேர்வு செய்திருப்போம் என்று கூறினார். இப்படி எடுத்த உடனே பாகிஸ்தான் அணியினர் டாஸை வென்றது கூட தோல்விக்கான ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இதனையடுத்து தோல்விக்கான 2-வது காரணம் பாகிஸ்தான் வீரர் ஷாகின் அஃப்ரடியின் அசத்தலான ஆட்டமாகும். இந்திய வீரர் ரோகித் சர்மா பந்துவீச்சில் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினாலும், இடக்கை பந்து வீச்சாளர்களை ரோகித் சர்மாவால் சமாளிக்க முடியவில்லை. மேட்ச் தொடங்கும்போதே முதல் ஆட்டத்திலேயே ரோஹித் சர்மா அவுட் ஆனார். இதனால் முதல் ஓவரிலேயே விராட் கோலி களம் இறங்கிய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த மேட்ச்சில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த பந்துவீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இது தோல்விக்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.
அதன் பிறகு 3-வது காரணம் விராட் கோலி ஹர்திக் பாண்டியாவை பேட்டிங்கில் இறக்கியது. ஏனெனில் ஹர்த்திக் பாண்டியா ஃபார்மில் இல்லாத போது விராட் கோலி அவரை பேட்ஸ்மேனாக களம் இறங்கியது மிகப்பெரிய தவறு என்று கூறப்பட்டது. இவருக்கு பதிலாக இஷான் கிஷோனை களம் இறக்கி இருந்தால் கூட நன்றாக விளையாடி இருப்பார் என்று கூறப்பட்டது. ஏனெனில் இஷான் கிஷோன் கடைசியாக ஆடிய 2 ஆட்டங்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இப்படி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷோனை வெளியே உட்கார வைத்துவிட்டு ஹர்த்திக் பாண்டியாவை விராட் கோலி களம் இறக்கியது அவருக்கு மிகப்பெரிய அடியாக விழுந்தது. இந்திய அணியிடம் விக்கெட்டுகள் இல்லாத காரணத்தினால் கடைசி ஓவர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. அதோடு விராட் கோலியின் ஆட்டம் தான் இந்திய அணியினர் கௌரவமான ரன்களை பெற உதவியது.
இதைத்தொடர்ந்து தோல்வி அடைவதற்கான 4-வது காரணம் பாகிஸ்தான் வீரர்களின் நேர்த்தியான ஆட்டமாகும். இந்த தொடரில் 152 ரன்கள் எடுத்தால் இந்தியாவை வீழ்த்தலாம் என்ற இலக்கோடு பாகிஸ்தான் அணியினர் களம் இறங்கினர். இந்த மேட்ச்சில் தொடக்க வீரர்களாக கேப்டன் பாபர் அசாமும், முகமது ரிஸ்வானும் களம் இறங்கினார். இந்த தொடரில் இந்திய பந்துவீச்சாளர்கள் அடிக்கடி மாறிக்கொண்டே இருந்தார்களே தவிர அவர்களால் சரியான விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. இது பாகிஸ்தான் அணியினருக்கு சாதகமாக அமைந்தது. மேலும் நிதானமாக விளையாடிய பாகிஸ்தான் அணியினர் 18-வது ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து வெற்றி பெற்றனர்.