பண மோசடி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாகல்புதூர் என்ற பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு திடீரென 10 லட்ச ரூபாய் கடன் தேவைப்பட்ட நிலையில், ரமேஷ் பாபு என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இவரிடம் குணசேகரன் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து கடன் பெற்று தருமாறு கூறியுள்ளார். அதன்படி ரமேஷ்பாபுவும் ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து 10 லட்ச ரூபாயை வாங்கி குணசேகரனிடம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ரமேஷ்பாபு நிதி நிறுவனத்தில் வட்டி அதிகம் என்றும் 10 லட்ச ரூபாயை தன்னுடைய வங்கி கணக்குக்கு அனுப்பினால், வங்கியில் இருந்து குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய குணசேகரனும் பணத்தை ரமேஷ்பாபுவின் வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் வங்கியில் இருந்து ரமேஷ் பாபு பணத்தை வாங்கி கொடுக்காமல் 10 லட்ச ரூபாயை அவரே வைத்துக் கொண்டார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குணசேகரன் திண்டுக்கல் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரமேஷ் பாபுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.