மகளிர் கிரிக்கெட்டிற்கான டி20 உலகக்கோப்பைத் தொடர்தான் அடுத்ததாக ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எப்போதும் போல் அல்லாமல் இந்த ஆண்டுக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை மீது அனைத்துத் தரப்பினரின் கண்களும்படத் தொடங்கியுள்ளன. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட உலகக்கோப்பைக்கான இந்திய மகளிர் அணியில் முழுக்க முழுக்க இளம் வீராங்கனைகளே ஆக்கிரமித்திருந்தனர். எந்த அளவிற்கு என்றால் தேர்வு செய்யப்பட்ட 15 வீராங்கனைகளில் 9 பேர் 22 வயதிற்குள் இருக்கின்றனர். அதிலும் தொடக்க வீராங்கனையாகக் களமிறங்கி வரும் ஷஃபாலி வர்மாவின் வயது 16 தான். இதனால் உலகக்கோப்பைத் தொடரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெல்லும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் ராமன் பேசுகையில், ”உலகக்கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ள அணியில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. ஏனென்றால், 2017 உலகக்கோப்பைத் தொடரிலும் 2018 டி20 உலகக்கோப்பைத் தொடரிலும் இந்திய வீராங்கனைகள் ரசிகர்களைப் பெருவாரியாக ஈர்த்துள்ளனர். கடந்த 6 மாதங்களில் இந்திய அணி அதீத வளர்ச்சியடைந்துள்ளது. உடல்தகுதியிலும் ஃபீல்டிங்கிலும் நல்ல வளார்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். அணியாகச் சரியான கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம்.
இந்திய வீராங்கனைகளில் கிரிக்கெட் போட்டிகளின்போது அவர்களாகவே எடுத்துக்கொள்ளும் பொறுப்புகள் அவர்களை உலகக்கோப்பையை வெல்ல வைக்கும். இந்த உலகக்கோப்பையை மட்டும் மகளிர் அணி கைப்பற்றினால் 1983ஆம் ஆண்டு கபில் தேவ் இந்தியாவில் செய்த மாற்றத்தை இந்திய மகளிர் அணி மீண்டும் செய்யும். இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டிற்கு இருக்கும் நிலையை மாற்றி புதிய வரலாற்றை உருவாக்கலாம்.
இந்த முத்தரப்பு தொடரின் மூலம் ஆஸ்திரேலிய தட்பவெட்ப நிலைக்கு வீராங்கனைகள் தங்களைத் தயார்படுத்திக்கொண்டுள்ளனர். தோல்வியடைந்த போட்டிகளின் மூலம் தவறுகளைத் திருத்திக்கொண்டுள்ளோம். நிச்சயம் இந்திய மகளிர் அணி உலகக்கோப்பையை வெல்லும்” என்றார்.