சமையல்கார பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள தக்கலை அருகே இருக்கும் முளகுமூடு பகுதியைச் சேர்ந்த சாந்தகுமாரி என்பவர் சமையல் வேலை செய்து வருகின்றார். இவர் நேற்று மதியம் தக்கல் பேருந்து நிலையம் அருகே நடந்து கொண்டிருந்த பொழுது இவரை பின் தொடர்ந்து வந்த பெண் ஒருவர் அவர் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றார். ஆனால் அதிர்ச்சி அடைந்த அவர் கையால் தடுத்தார். இதனால் அந்த பெண் சாந்தகுமாரியின் கையில் இருந்த 200 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பித்து ஓடினார்.
இதுபற்றி சாந்தகுமாரி தக்கலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் தேடி வந்த நிலையில் மணலி பேருந்து நிலையம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த பெண்ணை பிடித்து விசாரணை செய்தார்கள்.
அப்பொழுது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட பொழுது அவர் கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மஞ்சகுப்பத்தைச் சேர்ந்த கவிதா என்பது தெரிய வந்தது. இவர்தான் சமையல்கார பெண்ணிடம் நகை பறிக்க முயன்று பணம் பறித்துச் சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கவிதாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள்.