தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் பணியிட நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு மாவட்ட கல்வி அலுவலர்கள் உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும். அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பணியிட சேர்க்கை தொடர்பாக இஎம்ஐஎஸ் அடிப்படையில் ஆய்வு செய்து விவரங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனையடுத்து ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பணியிட சேர்க்கையில் மாவட்ட கல்வி அலுவலரின் செயல்முறைகள் குறித்து பார்க்கலாம்.
அதன்படி மாணவர்களின் வருகை பதிவேட்டினை ஆராய்ந்து இஎம்ஐஎஸ் அடிப்படையில் விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். அதன்பிறகு தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி மாணவர்களை வகுப்பு வாரியாக தனித்தனியாக கணக்கிட வேண்டும். சிறுபான்மை மொழி பள்ளிகள் மற்றும் இரு மொழி பள்ளிகள் தனித்தனியாக அனைத்து படிவங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பிறகு ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் 1 முதல் 8 வரையிலான படிவங்களை தனித்தனியாக நிரப்ப வேண்டும்.
இதே பள்ளிகளில் அனைத்து வகை ஆசிரியர்களின் பணி இடங்கள் குறித்த விவரங்களை அளவை பதிவேட்டின் படி ஒப்பிட்டு பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த பணியிடங்கள் கடந்த வருடம் காலி பணியிடமாக கருதப்பட்டிருந்தால், நடப்பாண்டிலும் காலி பணியிடம் என்றே கருதப்பட வேண்டுமே தவிர, அனுமதிக்கப்பட்ட பணியிடம் என்று பதிவேற்றம் செய்யக்கூடாது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விகிதம் துல்லியமாக அரசாணையின்படி கணக்கிடப்பட வேண்டும். அதன் பிறகு படிவம் 5 மற்றும் 6-ல் அதிகமாக இருக்கும் ஆசிரியர் பெயர் மற்றும் அவர் ஓய்வு பெறும் நாள் குறித்த விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
அனைத்து ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளிலும் இருந்தும் சான்றுகள் மொத்தமாக பெறப்பட்டு வட்டார கல்வி அலுவலர்கள் கையெழுத்திட வேண்டும். அதன் பிறகு முதன்மை கல்வி அலுவலர்கள் கையெழுத்திட வேண்டும். இதனையடுத்து பெறப்பட்ட படிவங்களை பள்ளிகள் மற்றும் நிர்வாக வாரியாக மாவட்ட கல்வி அலுவலர்கள் பிரித்து கையெழுத்திட வேண்டும். பள்ளிகளில் கூடுதலாக இருக்கும் ஆசிரியர்களின் விவரங்கள் மற்றும் கூடுதல் ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிகள் குறித்த விவரங்களை மாவட்ட வாரியாக முதன்மை கல்வி அலுவலர்கள் பிரித்து வழங்க வேண்டும். மேலும் 8 படிவங்களையும் மாவட்ட வாரியாக மாவட்ட கல்வி அலுவலர்கள் பிரித்து புத்தகம் போன்று தயார் செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.