கொல்கத்தா அணியின் முன்னாள் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் போல யாருமே இருக்கமாட்டார்கள் என்று அந்த அணியின் வீரர் வெங்கடேஷ் ஐயர் புகழ்ந்துள்ளார்..
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான பிரண்டன் மெக்கல்லம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்து வந்தார். பிரண்டன் மெக்கல்லம் கொல்கத்தா அணியில் ஏற்கனவே விளையாடியதன் காரணமாக அவரின் அனுபவத்தின் அடிப்படையில், அவரை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கொல்கத்தா அணி நிர்வாகம் அவரை புதிய பயிற்சியாளராக தேர்வு செய்தது. அதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக மெக்கல்லம் இருந்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக மெக்கல்லம் தேர்வு செய்யப்பட்டதற்கு பிறகு கொல்கத்தா அணியில் இருந்து விலகினார்.
மெக்கல்லம் தலைமையில் இங்கிலாந்து அணி பல அதிரடி வெற்றிகளை பெற்று வருகிறது. குறிப்பாக 4ஆவது இன்னிங்ஸில் கூட 300 முதல் 400 ரன்கள் வரை எளிதாக அடித்து வெற்றி பெற்று வருகிறது அந்த அணி. அந்த அளவிற்கு அந்த அணியை தயார் செய்து மாற்றி வைத்துள்ளார் மெக்கல்லம்.
இந்நிலையில் கடந்து 2021 ஆம் ஆண்டு கொல்கத்தா அணியில் பயிற்சியாளராக இருந்த மெக்கல்லமிடமிருந்து கற்றுக்கொண்ட சில விஷயங்களை பகிர்ந்துள்ளார் அந்த அணி வீரர் வெங்கடேஷ் ஐயர்.. இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு போட்டியின் போது நாங்கள் 7 விக்கெட்டுகளையும் இழந்து விட்டோம். அந்த நிலையில் வெற்றிக்கு 80 ரன்கள் தேவை. அப்போது மெக்கல்லம் எங்களிடம் வந்து இன்னும் 13 சிக்ஸர்கள் மட்டும்தான் நமக்கு தேவை என்று கூறினார்.. அந்த அணுகுமுறையை பின்பற்றினால் எளிதாக நம்மால் சாதிக்க முடியும் என்று ஊக்குவித்தார். இப்படி ஒரு இக்கட்டான சமயத்தில் கூட 7 விக்கெட்டுகளை இழந்தும் இவ்வளவு நம்பிக்கையாக யாருமே பேசி இருக்க மாட்டார்கள்.
அதன்படி வீரர்கள் மீது அவர் அதிக நம்பிக்கை வைப்பார். எந்த ஒரு வீரரையும் அழுத்தத்திற்குள் தள்ள விரும்ப மாட்டார் என்று கூறினார். மேலும் தான் சந்தித்ததிலேயே மெக்கல்லம் ஒரு சிறந்த நம்பிக்கையானவர். எந்த சூழ்நிலையிலும் எந்த நேரத்திலும் தைரியமான அணுகுமுறையை அவர் பின்பற்றுவார் என்று தெரிவித்தார்.