Categories
கிரிக்கெட் விளையாட்டு

முகமது ஹஃபீஸுக்கான தடையை விலக்கியது ஐசிசி

பாகிஸ்தான் அணியின் அனுபவ வீரர் முகமது ஹஃபீஸ் பந்துவீசுவதற்கு விதிக்கப்பட்ட தடையை தற்போது ஐசிசி விலக்கியது.

2019ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடந்த விடாலிட்டி பிளாஸ்ட் (vitality Blast) தொடரின்போது கள நடுவர்களால் பாகிஸ்தான் வீரர் முகமது ஹஃபீஸ் பந்துவீசும் விதம் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டு, அவருடைய பந்துவீச்சை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பரிசோதனை செய்தது. அதில் முகமது ஹஃபீஸின் முழங்கை அனுமதிக்கப்பட்ட எல்லையைக் கடந்து 15 டிகிரி விலகிச் செல்வதால், அவருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் சம்மந்தப்பட்ட போட்டிகளில் பந்துவீசுவதற்குத் தடை விதித்தது.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஐசிசியும் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி முகமது ஹஃபீஸ் சர்வதேச மற்றும் டி20 லீக் போட்டிகளில் பந்துவீசுவதற்குத் தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி லாகூரில் நடந்த சோதனையில் முகமது ஹஃபீஸ் கலந்துகொண்டார். அதில் ஐசிசி விதிமுறைக்கு உட்பட்டு சரியான விதத்தில் முகமது ஹஃபீஸ் பந்துவீசியதால், அவர் பந்துவீசுவதற்கான தடையை ஐசிசி தற்போது விலக்கியுள்ளது.

முகமது ஹஃபீஸின் பந்துவீச்சில் 2015ஆம் ஆண்டே சந்தேகம் எழுந்து பரிசோதனை செய்தபோது, அவர் பந்துவீச ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது. பின்னர் தடை முடிந்து மீண்டும் பந்துவீச்சுக்குத் திரும்புகையில், இலங்கை அணிக்கு எதிரான தொடரின்போது மீண்டும் குற்றச்சாட்டு எழுந்தது.

Categories

Tech |