சென்னை மயிலாப்பூர் கேசவ பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருபவர் துர்காம்பாள் (74). இவர் சென்ற 15 ஆம் தேதியன்று மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார். அவற்றில் அவர் கூறியிருப்பதாவது, என் கணவர் குப்புசாமி (90) வயது முதிர்வு காரணமாக சென்ற மாதம் 3-ம் தேதி இறந்துவிட்டார். மேலும் மூத்த மகன் சென்ற வருடம் உயிரிழந்துவிட்டார். இதற்கிடையில் இளையமகன் ராமகிருஷ்ணன் திருமணமாகி அமெரிக்காவில் குடியேறி விட்டான். இதில் ராமகிருஷ்ணன் தந்தை இறப்புக்கு கூட அவன் வரவில்லை.
இதையடுத்து 10 தினங்களுக்கு பின் ராமகிருஷ்ணன் சடங்கிற்குதான் வந்தான். பின் சடங்கு முடிந்ததும் மீண்டும் அமெரிக்கா செல்ல இருக்கிறான். எனக்கு எவ்வித உதவியும் செய்யாமல் தனிமையில் தவிக்க விட்டுள்ளான். ஆகவே அவன் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் எனக்கு உதவிகள் கிடைக்க ஏற்பாடுசெய்ய வேண்டும்” என்று துர்காம்பாள் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் துர்காம்பாள் அளித்த புகார் குறித்து காவல்துறையினர் மூத்த குடிமக்கள் பெற்றோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
மேலும் ராமகிருஷ்ணன் அமெரிக்கா செல்வதை தடுப்பதற்கு விமான நிலையங்களுக்கு “லுக் அவுட்” நோட்டீசும் அனுப்பியிருந்தனர். அதனை தொடர்ந்து ராமகிருஷ்ணன் அமெரிக்கா போவதற்காக கடந்த 22-ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் சென்னை விமானநிலையம் வந்துள்ளார். அப்போது ராமகிருஷ்ணனின் பாஸ்போர்ட்டை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது, அவரது பெயரில் காவல்துறையினர் “லூக் அவுட்” இருப்பதை கண்டனர். அதன்பின் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி காவல்துறையினர் விமான நிலையம் சென்று ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.