வேன் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் தாய்-மகள் உள்பட 6 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை லீ பஜார் பகுதியில் ஆட்டோ மெக்கானிக்கான ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் உடல் நல குறைவால் இறந்த ஆறுமுகத்திற்கு 30-வது நாள் துக்கம் அனுசரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு துக்க வீட்டிற்கு வந்த 11 பேர் நள்ளிரவு நேரத்தில் ஒரு வேனில் டீ குடிப்பதற்காக ஆத்தூர் புறவழிச் சாலைக்கு சென்றுள்ளனர். இந்த வேனை ராஜேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.
இந்நிலையில் ஒட்டம்பாறை பகுதியில் சென்று கொண்டிருந்த போது சேலம் நோக்கி வேகமாக சென்ற ஆம்னி பேருந்து வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் வேன் சுக்குநூறாக நொறுங்கியது. இதனை அடுத்து வேன் ஓட்டுநர் ராஜேஷ்(29), அவரது சகோதரி ரம்யா(25) சந்தியா(23), சரண்யா(23), சுகன்யா(27) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுதா(36), புவனேஸ்வரி(17), கிருஷ்ணவேணி(45), பெரியண்ணன்(38), உதயகுமார்(17), தன்ஷிகா(11) ஆகிய ஆறு பேரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் சுகன்யாவின் மகளான தன்ஷிகா மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 5 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய ஆம்னி பேருந்து ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.