கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி சிந்தாமணி நகரில் தச்சு தொழிலாளியான பேச்சிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலையூர் ரோடு பகுதியில் உள்ள பழைய அரசு மாணவர் விடுதிக்கு வேலைக்காக சென்றிருந்தார். அப்போது அங்கு இருந்த கிணற்றுக்குள் இருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்டுள்ளது. இதனையடுத்து பேச்சிமுத்து அந்தக் கிணற்றில் எட்டி பார்த்துள்ளார். அப்போது கிணற்றின் உள்ளே ஒரு பெண் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தார். அதன்பின் பேச்சிமுத்து கிணற்றுக்குள் குதித்து அந்தப் பெண்ணை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் கிணற்றிலிருந்து மேலே ஏறுவதற்கு படிகள் எதுவும் இல்லாததால் இருவரும் உள்ளேயே வெளியே வர முடியாமல் பரிதவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் பார்த்து கோவில்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோவில்பட்டி தீயணைப்பு துறையினர் இருவரையும் பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கோவில்பட்டி காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் குடும்ப பிரச்சினையால் அந்த பெண் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் இருவரையும் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.