பிரம்மோஸ்ஏவுகணை விவகாரம் தொடர்பாக 3 இராணுவ அதிகாரிகளை இந்தியாவானது பதவிநீக்கம் செய்த நடவடிக்கை போதுமானதாக இல்லை என பாகிஸ்தான் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. இந்தியாவின் சூப்பர் சோனிக் ஏவுகணையான பிரம் மோஸ் சென்ற மார்ச் மாதம் தவறுதலாக பாகிஸ்தான் நாட்டிற்குள் சென்று விழுந்தது. இதற்கு பாகிஸ்தான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் தவறுதலாக இது நடந்துவிட்டதாக இந்தியா விளக்கமளித்தது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், விமானப் படை அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த தவறு நடைபெற்றதாக உறுதியாகியது. அதன்பின் 3 அதிகாரிகள் நேற்று முன்தினம் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இது பற்றி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “எதிர்பார்த்ததுபோல் இந்த சம்பவம் குறித்து இந்தியா எடுத்திருக்கும் நடவடிக்கை முற்றிலும் அதிருப்தி அளிக்ககூடியதாக இருக்கிறது.
இவற்றில் குறைகள் இருக்கிறது. ஆகவே இந்த நடவடிக்கை போதுமானதாக இல்லை. இதற்கிடையில் இந்தியாவின் நீதிமன்ற விசாரணையை பாகிஸ்தான் நிராகரிக்கிறது. நடந்த சம்பவம் குறித்து கூட்டுவிசாரணை நடத்த வேண்டும். இதற்கு சரியான பதில் தராமல் இந்தியா மழுப்பி வருகிறது. மறைப்பதற்கு ஒன்றுமில்லை எனில், வெளிப்படையான கூட்டு விசாரணையை அது ஏற்கவேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.