Categories
மாநில செய்திகள்

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் – சு. வெங்கடேசன் எம்.பி.

மெட்ரோ ரயில் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கான திட்டத்தினை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும் என்று மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சு. வெங்கடேசன், நாளைய தினம் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. தென் மாநிலங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மதுரை- தூத்துக்குடி தொழில் வழி சாலைக்கு தனி அலுவலரை நியமிக்க வேண்டும்.

பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே கூறியிருந்தது. அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு தற்போது கோவையில் மெட்ரோ அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை பெற்று, வருகிற டிசம்பர் 20ஆம் தேதி அதற்கான பணியை தொடங்கவுள்ளது. எனவே மதுரையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கான திட்டத்தினை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ரயில்வே பட்ஜெட்டில் தொடர்ந்து தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக மதுரை – கன்னியாகுமரி இருவழி ரயில் பாதைக்கு 50 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணி நிறைவடைய இன்னும் நான்கைந்து ஆண்டுகள் ஆகும். எனவே தமிழ்நாடு அரசு உடனே இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Categories

Tech |