உத்தரபிரதேசத்தில் உள்ள இரட்டை கோபுரங்கள் சட்டவிரோத கட்டுமானங்கள் என கண்டறியப்பட்டு இடிக்கப்பட உள்ளதால், அதன் அருகே டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக நொய்டா காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 26 முதல் 28 வரை எந்த ஒரு தனியாரோ, நிறுவனமோ டிரோன் விமானங்களை இயக்கக் கூடாது. உத்தரவை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ், தீயணைப்பு படை மற்றும் போலீஸ் படைகள் முழுமையாக தயார் நிலையில் இருக்கும் என்று நொய்டா ஆணையம் முன்பு தெரிவித்திருந்தது. ஆகஸ்ட் 28 ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் கோபுரங்கள் வெடி வைத்து இடிக்கப்படும். ரியல் எஸ்டேட் நிறுவனமான சூப்பர்டெக் நிறுவனத்தால் கட்டப்பட்ட இந்த இரட்டைக் கட்டிடத்தில் 900 குடியிருப்புகள் மற்றும் 21 கடைகள் உள்ளன. கட்டிடங்களில் ஏற்கனவே 3,700 கிலோ வெடிமருந்துகளால் 9,400 துளைகள் நிரப்பப்பட்டுள்ளன. வெளிநாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் வெடிகுண்டு வெடிப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.