7 மாத கர்ப்பிணி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்னவாடி கிராமத்தில் அற்புதராஜ்(20) என்பவர் வசித்து வருகிறார். இவர் காய்கறி மார்க்கெட்டில் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் அற்புதராஜ் விருதாச்சலம் வடக்கு பெரியார் நகரை சேர்ந்த சக்தி(18) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் சக்தி அவரது தாயார் லதா வீட்டில் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் தனக்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என சக்தி தனது கணவரிடம் கூறியுள்ளார். அதற்கு ஏற்கனவே கடன் அதிகமாக இருப்பதால் வளைகாப்பு நடத்த முடியாது என அற்புதராஜ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் ரத்த காயங்களுடன் சக்தி சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த லதா கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சக்தியின் உடலை மீட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அற்புதராஜை பிடித்து விசாரித்த போது அவர் சக்தியை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
அற்புதராஜ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது, வளைகாப்பு நடத்துவது தொடர்பாக எனக்கும், எனது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் வீட்டிலிருந்த கரண்டியால் சக்தியை தாக்கினேன். மேலும் கோபத்தில் அவரது முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் கையால் குத்திவிட்டு வேலைக்கு சென்று விட்டேன். பின்னர் 3 முறை வீட்டிற்கு வந்து பார்த்த போது சக்தி பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்ததால் உடனடியாக வேலைக்கு சென்ற எனது மாமியாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டேன்.
அவரிடம் சக்தி போனை எடுக்கவில்லை. எனக்கு வேலை அதிகமாக இருப்பதால் நீங்கள் வீட்டிற்கு சென்று பாருங்கள் என கூறினேன். அங்கு சென்ற எனது மாமியார் சக்தி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து எனக்கு தகவல் தெரிவித்தார். நான் எதுவும் தெரியாதது போல் நடித்து வீட்டிற்கு சென்று மனைவியின் உடலை பார்த்து அழுதேன். ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில் சிக்கிக்கொண்டேன் என அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.