சென்னை மேற்கு மாம்பலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பிரபல ஆயில் விற்பனை கடையான ஸ்ரீ மாலையம்மன் ஆயில் ஸ்டோர்ஸில் கலப்பட எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் திடீரென சோதனை மேற்கொண்டுள்ளனர். கடையில் சோதனை செய்தபோது பூமிக்கு அடியில் தனியாக தொட்டி ஒன்று கட்டி அதில் உணவு சமைக்கும் எண்ணெயை சேமித்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. அதன் பின் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீ மாலையம்மன் ஆயில் ஸ்டோர்ஸில் கலப்பட எண்ணெய் விற்கப்படுவதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அங்கு சோதனை மேற்கொண்ட போதும் தொட்டி போன்று அமைத்து அதில் சன் ஃபிளவர் மற்றும் பாமாயில் கலந்து வைத்து விற்பனை செய்திருக்கின்றனர். மேலும் அங்கிருந்து சன் பிளவர் ஆயில் ஆயிரம் லிட்டர் பாமாயில் 3,400 லிட்டர் என மொத்தம் 4,400 கெட்டுப்போன எண்ணையை பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த கடை முறையான அனுமதி இல்லாமல் நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் விற்பனையாளர்கள் இது போன்ற தவறை செய்ய வேண்டாம் என கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் சென்னையில் உள்ள உணவகங்கள் ஜூஸ் பார்லர்கள் கடைகள் உள்ளிட்ட இடங்களில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால் 94440 42322 என்ற எண்ணிற்கு whatsapp மூலமாக வீடியோ புகைப்பட ஆதாரங்களை அனுப்பி தகவல் தெரிவித்துக் கொள்ளலாம் என சதீஷ்குமார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.