ஈரோடு பெருந்துறை அடுத்த சரளை பகுதியில் நடந்த அரசு விழாவில் 261.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 135 முடிவுற்ற பணிகளை திறந்துவைத்தும் , 183.70 கோடி ரூபாய் மதிப்பில் 1761 புதிய பணிகளுக்கான அடிக்கலும் முதல்வர் ஸ்டாலினால் நாட்டப்பட்டது. அத்துடன் 63 ஆயிரத்து 858 பயனர்களுக்கு 167.50 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார். இதையடுத்து முதல்வர் பேசியதாவது “ஈரோடு என்பது தமிழராகிய நாம் உணர்வோடு கலந்த ஊர் ஆகும். பெருந்துறை அருகில் திங்களுரில் தமிழ் சங்கம் இருந்ததாக வரலாறு கூறுகிறது. சில பேர் செய்யும் பணி அடக்கமாக ஆர்ப்பாட்டம் இன்றி இருக்கும்.
சென்ற ஓராண்டில் பலதுறைகள் சார்பாக எண்ணற்ற பணிகள் செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டை அனைத்திலும் முதன்மையாக மாற்ற பணிகளை செய்து வருகிறோம். அவினாசி – அத்திக்கடவு திட்டபணிகளை பார்வையிட்டு துரிதமாக நிறைவேற்ற உத்தரவு பிறப்பித்துள்ளேன். சில மாதங்களில் பணிகள் முடிவுற்றபின் நானே அதை தொடங்கி வைப்பேன். அரசு விழாக்கள் பொழுதுபோக்கிற்கிற்காக நடக்கும் விழாவோ , எங்களது புகழ்பாட நடக்கும் விழாவோ அல்ல. எனக்கு புகழ் தேவை இல்லை. தற்போது இருக்கும் புகழே போதுமானது.
என் உயிர் இருக்கும் வரையிலும் மக்களுக்காக உழைப்பேன். அனைத்து மக்களும் உயர்வு பெறும் விதமாக திராவிடமாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. குறுவை சாகுபடிக்காக முன்கூட்டியே திறந்து கடைமடை பகுதி வரை நீர்செல்ல தூர் வாரப்பட்டுள்ளது. அனைத்துவகை சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு உயர்நீதிமன்றம் சட்டப்பூர்வமாக அங்கீகாரம் வழங்கி இருக்கிறது . பெரியார் மற்றும் அண்ணாவும் இருந்திருந்தால் இதனை பார்த்து சந்தோஷப்பட்டிருப்பார்கள். இது நம் கொள்ககைக்கு கிடைத்த வெற்றி ஆகும்.
திராவிடமாடல் அரசு இந்தியாவிற்கே வழிகாட்டியாக உள்ளது. இல்லம் தேடி கல்வி , பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் , வீடுதேடி மருத்துவம் என தமிழக திட்டங்களை பல மாநிலங்கள் பின்பற்றுகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் சிசு மரணம் குறைவு, பட்டினி சாவு இல்லை” என்று அவர் பேசினார். முன்பாக முதல்வர் ஸ்டாலின், அரசின் பலதுறைகள் சார்பாக அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி , தமிழக அமைச்சர்கள் சு.முத்துசாமி , சாமிநாதன் , கயல்விழி போன்றோர் பங்கேற்றனர்.