Categories
மாநில செய்திகள்

தந்தை கொடுத்தார், தனயன் கெடுத்தார்…. முதல்வரே பழிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள்‌…. மக்கள் நீதி மய்யத்தின் திடீர் அறிக்கை‌….!!!!

மக்கள் நீதி மய்யம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், போக்குவரத்து துறை பணியாளர்களுக்கு ஊதிய ஒப்பந்த கால வரையறை மாற்றத்தை ரத்து செய்ய, அகவிலைப் படியை உயர்த்திக் கொடுக்க, பணி ஓய்வுக்கு பிந்தைய பணப்பயனை உடனே வழங்க மக்கள் நீதி மையம் வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் முதல்வராக இருந்த அம்மா ஜெயலலிதா அவர்கள் 3 ஆண்டு களாக இருந்த பழைய ஓய்வூதிய ஒப்பந்தத்தை மாற்றி 5 ஆண்டுகளாக உயர்த்தினார். கடந்த 2006-ம் ஆண்டு முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று ஊதிய ஒப்பந்த காலத்தை மீண்டும் 3 ஆண்டுகளாக மாற்றினார்.

இந்த 3 ஆண்டுகால ஊதிய ஒப்பந்த காலம் கடந்த 2019-ம் ஆண்டு காலாவதி ஆகிவிட்டது. இது தொடர்பான பேச்சுவார்த்தையை அதிமுக அரசு கொரோனா காரணமாக தள்ளிப் போட்ட நிலையில், போக்குவரத்து ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூபாய் 1000 வழங்கியது. இதே முறையை தான் தற்போது திமுக அரசும் பின்பற்றி வருகிறது. இந்நிலையில் தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்ற போக்குவரத்து துறை அமைச்சர் 3 ஆண்டுகளாக இருந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை 4 ஆண்டுகளாக மாற்றுவதாக அறிவித்தார். அதோடு போக்குவரத்து தொழிலாளர்கள் 25% ஊதிய உயர்வு கேட்டிருக்கும் நிலையில், நிதி சுமையை காரணம் காட்டி அரசு 5% மட்டுமே ஊதியத்தை உயர்த்தியது கண்டனத்திற்குரிய விஷயமாகும்.

கடந்த 2020-ஆம் ஆண்டுக்கு பிறகு ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஓய்வு கால பலன்கள் எதுவும் வழங்கப்படாமல் இருக்கிறது. போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தந்தை கொடுத்தார், தனயன் அதை கெடுத்தார். முதல்வரே பழிச்சொல்லுக்கு ஆளாகாதீர்கள். உடனே போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வை கலைஞர் போன்று நீங்களும் 3 ஆண்டுகளாக மாற்றுங்கள். கடந்த 2015-ஆம் ஆண்டிற்கு பிறகு சுமார் 85 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் இருக்கிறது. எனவே போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்திக் கொடுக்கவும், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி கொடுக்கவும், ஊதிய உயர்வு காலத்தை 3 ஆண்டுகளாக குறைக்கவும் வலியுறுத்திக் கொள்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |