கொரோனாவிற்கு பின்னர் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு அதிகரித்து இருப்பதாக அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிர்வாக இயக்குனர் மகேசுவரன் கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு வனத்துறை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சூழல் மேம்பாட்டு கூட்டம் சார்பாக அயல்நாட்டு வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு, சூழல் இளையோர் விளையாட்டு மன்றம் தொடங்குதல், விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க மருந்துகள் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் வரவேற்க களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை வன பாதுகாவலர் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்துக்கு பிறகு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் பேசியதாவது, கொரோனாவுக்கு பின்னர் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு அதிகரித்திருக்கின்றன. வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல விரும்புவர்கள் www.omcmanpower.com என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். தற்பொழுது எங்கள் நிறுவனம் மூலமாக துபாயில் வீட்டு வேலை செய்ய 500 பேரும் குவைத்தில் செவிலியர்கள் 500 பேரும் வேலைக்கு எடுக்க ஒப்பந்தம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு அதிகரிப்பதால் தொடர்ந்து விழிப்புணர்வை நாங்கள் ஏற்படுத்தி வருகின்றோம். ஆங்கிலம் பேசக்கூடிய அமெரிக்க, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வேலை செய்ய வேண்டும் என்றால் அவர்களின் மொழி உச்சரிப்புக்கு ஏற்ப மொழித்திறன் பெற்று இருக்க வேண்டும். மேலும் அந்த நாடுகள் வைக்கப்படும் மொழித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மேலும் திருச்சி, சென்னை, மதுரை, நாமக்கல் ஆகிய இடங்களில் செவிலியர் கல்லூரிகளில் இதற்கான பயிற்சி வகுப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு தமிழக அரசு 87 லட்சம் நிதி கொடுத்திருக்கின்றது என அவர் கூறியுள்ளார்.