எத்தியோப்பியாவில் மழலையர் பள்ளிக்கூடம் மீது வான்தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்ள டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரில் ஒரு போராளி அமைப்பு செயல்படுகின்றது. இந்த அமைப்புக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகின்றது. சுமார் 2 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர்.
டைக்ரே போராளி அமைப்பை ஒடுக்குவதற்கு அந்நாட்டின் பிரதமர் அபி அகமது உத்தரவின் பேரில் ராணுவம் நடத்துகிற தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலியாவது தொடர் கதையாகி வருகின்றது. இந்நிலையில் டைக்ரே மாகாணத்தின் தலைநகரான மெக்கேலேவில் நேற்று முன்தினம் அரசு படைகள் வான்தாக்குதல் நடத்தின. அப்போது அங்குள்ள ஒரு மழலையர் பள்ளிக்கூடம் மீது குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் பள்ளிக்கூடம் தரைமட்டமானது. இந்த வான்தாக்குதலில் 4 சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகின்றது. ஆனால் எத்தியோப்பியா அரசு மழலையர் பள்ளிக்கூடம் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும், போராளிகளின் நிலைகளை குறிவைத்தே தாக்குதல் நடத்தியதாவும் விளக்கமளித்துள்ளது. இதற்கிடையில் எத்தியோப்பியாவில் மழலையர் பள்ளிக்கூடம் மீது வான்தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.