மதுரை கே.கே.நகரை சேர்ந்த சிவராஜா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது, மதுரை கே.கே.நகர் விநாயகர் நகரில் பால் கடை நடத்தி வருகிறேன். வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு 24 மணி நேரமும் பால் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் கடையில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் இரவு நேரத்தில் பால் வியாபாரத்தை தடுக்கும் வகையில் அண்ணாநகர் போலீசார் தொந்தரவு செய்து வருகின்றனர். அத்தியாவசிய பொருளான பால் வியாபாரத்திற்கு பெரும் தடையாக போலீசார் இருந்து வருகின்றனர் என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ள மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை பிறப்பித்த அரசாணையின்படி மனுதாரர் கடையை 24 மணி நேரமும் திறந்து வைத்து நடத்தலாம். இதில் போலீசார் குறுக்கிடக்கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.