தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் மர்ம நபர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் மர்ம நபர்களின் செயல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி தான் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் நல்லவர்கள் போல் நாடகமாடி சிலர் பணத்தை சுருட்டுவது தற்போது அரங்கேறி வருகிறது. தற்போது ஒருவர் உளவுத்துறை போலீஸ் போல் நாடகமாடி ஊராட்சி மன்ற தலைவரிடம் பணமோசடி செய்தது தெரியவந்தது.
காஞ்சீபுரம் ஸ்ரீ பெரும்புதூரை அடுத்த செங்காடு ஊராட்சியை சேர்ந்த தி.மு.க-வை சேர்ந்த சம்பத்(49) முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். அத்துடன் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்துவந்தார். இதில் சம்பத்துக்கு சென்ற சில நாட்களுக்கு முன் தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது பேசிய நபர் “நான் மத்திய உளவுத்துறை போலீஸ். நீங்கள் செய்யக்கூடிய தொழிலில் அதிக வருமானம் வந்துள்ளது. இதற்கிடையில் நீங்கள் வருமானம் தொடர்பான கணக்கை காட்டாமல் இருக்கிறீர்கள். இதனால் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்து கார், வீடு ஆகியவைகளை ஜப்தி செய்து விடுவோம்.
ஆனால் எனக்கு ரூபாய்.10 லட்சம் கொடுத்தால் உங்களை அவ்வழக்கில் இருந்து விடுவித்து விடுவோம்” என மிரட்டினார். இதன் காரணமாக பயந்துபோன சம்பத் ரூபாய்.7 லட்சத்தை தன் டிரைவரிடம் கொடுத்து அனுப்பி இருக்கிறார். அதன்பின் அந்த மர்மநபர் ரூபாய்.7 லட்சத்தை பெற்றுகொண்டு டிரைவரிடம் “உன் முதலாளியிடம் போய் சொல்லு. இதுகுறித்து யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவோம்” என்று மிரட்டினார்.
இதனால் மனஉளைச்சலில் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பத் வீடு திரும்பினார். அதன்பின் சம்பத் இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். அந்நபர் சென்னை புளியந்தோப்பு நரசிம்மா நகர் 5வது தெருவை சேர்ந்த தாமோதரன் (38) என்பதும், மத்திய உளவு துறை போலீசாக நடித்து சம்பத்திடம் ரூபாய்.7 லட்சம் பறித்ததும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து தாமோதரனை காவல்துறையினர் கைது செய்து காஞ்சீபுரம் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.