ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன் தினம் இரவு கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும் பல்வேறு இடங்களில் வீடுகளிலும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் உறக்கம் இன்றி பரிதவித்தனர். இந்நிலையில் ஈரோடு சூளை பகுதியில் கன மழை காரணமாக மண்அரிப்பு ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் பதிக்கப்பட்டிருந்த ஊராட்சிக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறியது. இது தொடர்பாக தகவல் கிடைத்ததும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அதன்பின் பொக்லைன் எந்திரம் வாயிலாக குழிகள் தோண்டப்பட்டு தண்ணீர் ஓடையில் சென்று கலந்துவிடும்படி ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்பின் தண்ணீரை நிறுத்தி விட்டு குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இவ்வாறு குழாயில் ஏற்பட்ட உடைப்பால் ஈரோடு மாநகராட்சி 5, 8, 9, 12, 18 ஆகிய வார்டுகளான சி.என். கல்லூரி பகுதி, செங்குந்தர்நகர், எஸ்.எஸ்.வி.நகர், மாணிக்கம்பாளையம், வசந்தம்நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.