தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பரவலாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பல்வேறு அணைகள் நிரம்பியதால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதன் பிறகு மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதோடு சாலைகளிலும் தண்ணீர் வெள்ளம் போல் ஓடுவதோடு, பல்வேறு இடங்களில் உள்ள தரைப் பாலங்களும் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அந்த வகையில் கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருவதால், ஆணைவாரி, உப்பு ஓடை மற்றும் சின்னாறு வழியாக தண்ணீர் வெள்ளாறை வந்தடைகிறது. இந்த ஆற்றில் விளைநிலங்களில் தேங்கிய தண்ணீரும் அவ்வப்போது வடிகட்டப்படுகிறது. இதன் காரணமாக வெள்ளாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கினால் கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 15 கிலோமீட்டர் சுற்றி கடலூர் மாவட்டத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வருடமும் மழை பெய்யும் போது தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவதால் பாதியிலேயே நிறுத்தப்பட்ட மேம்பால பணிகளை அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.