பழங்குடியினர் வாழ்விடம்தான் உயரத்தில் உள்ளதே தவிர, அவர்களின் வாழ்க்கைத் தரமோ அதலபாதாளத்தில் கிடக்கிறது. கல்விதான் சமூக மாற்றத்தின் திறவுகோல். பல சமூகங்கள் கல்வியின் உதவியால், உயரவும் செய்திருக்கின்றன. ஆனால், பழங்குடியினருக்குக் கல்வி இன்னமும் எட்டாக் கனியாகவே இருக்கிறது. மற்ற கிராமங்களைப் போல, மலைவாழ் மக்களுக்கு வாழ்விடத்தில் கல்வி பயிலும் வாய்ப்பு இல்லை. வனச் சட்டங்களால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். பிழைப்பு தேடி சமவெளிக்கு சென்று வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் செல்லும்போது தங்களது குழந்தைகளையும் அழைத்துச் சென்று விடுகிறார்கள். கல்வி என்பது ஒருவருக்கு நிலையான அழிவில்லா செல்வமாகும். அந்த செல்வம் மலைவாழ் குழந்தைகளுக்கு கிடைத்தது. வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக மலைப்பிரதேசங்களில் அரசு மலைவாழ் உண்டு உறைவிடம் பள்ளிகளை நடத்தி வருகிறது. ஆனால் அந்த பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஏற்ற வகையில் கற்றல், கற்பித்தல் முறை பின்பற்றப்படுகிறதா? என்பதை உயர் அதிகாரிகள் கண்காணிக்க தவறிவிடுகின்றனர்.
எனவே இந்த பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளை அங்கு பணிபுரியும் சிலர் தங்களை சொந்த வேலைக்காக பயன்படுத்தி அவரது கல்வி பருவத்தில் இருந்தே பாழாக்கி, கல்வி செல்வம் கிடைக்காமல் தடுக்க முட்டுக்கட்டை போடுகிறார்கள். இது போன்ற நிலைகள் கல்வராயன் மலையிலும் அரங்கேறி வருகிறது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகில் உள்ள கல்வராயன் மலை அடிவாரத்தில் பொட்டியம் கிராமம் உள்ளது. இங்கு அரசு மலைவாழ்வு உண்டு உறைவிட நடுப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இங்கே உணவு சமைத்து தரப்பட்டு வருகிறது. ஆனால் தங்களுக்கான உணவை சமைக்க மாணவிகள் தான் வேலை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது பள்ளியில் சமையல் செய்யும் ஊழியர்கள் மாணவிகளுடன் குடங்களை கொடுத்து அனுப்பி தண்ணீர் பிடித்து வர சொல்லுகிறார்கள். அந்த சின்னஞ்சிறு மாணவிகளும் தங்களது பிஞ்சு கரங்களால் அடிபம்பில் மூன்று குடங்களில் தண்ணீர் அடித்து அதை பள்ளிக்கூடத்திற்கு சுமந்து செல்கிறார்கள். இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
அதனைத் தொடர்ந்து பள்ளியில் பேனா பிடித்து எழுதி பழக வேண்டிய அந்த கைகளால் கைபம்பில் மாணவர்கள் தண்ணீர் அடிப்பதும், தண்ணீர் குடத்தை தங்களது தலை மீது வைத்துக் கொண்டு தலை எங்கும் இங்கும் நடுங்கும் விதமாக அசைந்து செல்வது, மற்றொரு மாணவி தனது இடுப்பில் குடத்தை சுமந்து செல்வது அந்த வீடியோ பதிவில் பார்க்கும் போது அத்தனை இறக்கமற்றவர்களாய் இருக்கிறார்கள்? என்று கேள்வி எழுகிறது. இதனையடுத்து மலைவாழ் மக்கள் 100% கல்வியில் வளர்ச்சி பெற்று உயர் கல்வி கற்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கமாக இருக்கிறதா. ஆனால் இது போன்ற ஒரு சிலரின் செயல்பாடு தான் பள்ளி இடைநிற்றல், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் முறை ஆகியவற்றை பெருக்குவதற்கு அடித்தளமாக அமைந்துவிடுகிறது. எனவே இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லையென்றால் மலைவாழ் குழந்தைகளுக்கு சமவெளி பகுதியில் 1 ஆம் வகுப்பில் ஒரு குழந்தை பயிலும் கல்வி கூட அவர்களுக்காக கிடைக்காமல் போய்விடும். எனவே மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு மலைவாழ் குழந்தைகளின் கல்விக்கு தரமான அடித்தளம் அமைத்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.