நடிகை சோனாலி மரணம் குறித்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என கோவா முதலமைச்சர் கூறியுள்ளார்.
பிரபல நடிகையான சோனாலி போகத் டிவி விவாத நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கின்றார். இவர் டிவி நிகழ்ச்சி, வெப் தொடர் உள்ளிட்டவற்றிலும் நடித்துள்ளார். இவர் அரியானா மாநில பாஜக கட்சியை சேர்ந்தவராவார். மேலும் இவர் பிக்பாக்ஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருக்கின்றார். இந்த நிலையில் கோவாவுக்கு சுற்றுலா சென்ற இவர் கடந்த 22ஆம் தேதி இரவு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இரவு ஹோட்டலில் மதுவிருந்தில் பங்கேற்ற சோனாலிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார்கள். இச்சம்பவம் தொடர்பாக சோனாலியின் உதவியாளர் சுதீர் சக்வான், மற்றொரு உதவியாளர் சுக்விந்தர் சிங் மற்றும் அவர் தங்கி இருந்த ஓட்டல் உரிமையாளர் எட்வின் நுனீஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டார்கள்.
இதை எடுத்து அவரின் உடல் பிரேத பரிசோதனை செய்ததில் போதை பொருள் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் போதை பொருள் விநியோகம் செய்த தட்டாபிரசாத் காவ்ங்கர் என்ற நபரை போலீசார் கைது செய்தார்கள். இவ்வழக்கு தொடர்பாக போலீசார் இதுவரை ஐந்து பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் சோனாலி மரணத்தில் சந்தேகம் இருப்பதால் சிபிஐ கொண்டு விசாரிக்க வேண்டும் என அவரின் குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளார்கள். தற்பொழுது தேவை ஏற்பட்டால் சோனாலி மரணம் தொடர்பான வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என கோவா முதலமைச்சர் கூறியுள்ளார்.