முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை-1, கணினி பயிற்றுனர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு நடந்தது. இதற்கான தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து தற்காலிக விடைக்குறிப்பு கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதியும், கடந்த ஜூலை மாதம் 4ம் தேதி இறுதி விடைக்குறிப்பும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இந்த பணியிடங்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல், விலங்கியல், வணிகவியல், வரலாறு உள்பட 17 பாடப்பிரிவுகளில் 1:2 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
மொத்தம் 8 ஆயிரத்து 929 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம் http://trb.tn.nic.in/ என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கான இடம் மற்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட தேதியில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு நேரில் வராத விண்ணப்பதாரர்கள், தேர்வுக்கான தகுதி மதிப்பெண்ணை பெற்றிருந்தாலும், தேர்வு செயல்முறைக்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.