சேலம் மாவட்டத்தின் பிரதான நீர் ஆதாரங்களில் கன்னங்குறிச்சி புது ஏரி முக்கியமான ஒன்றாகும். சென்ற சில நாட்களாக பெய்துவரும் மழையின் காரணமாக ஏற்காடு மலைப்பகுதியில் நீரோடைகளில் தண்ணீர்வரத்து ஏற்பட்டது. இதனால் ஏற்காடு மலையிலிருந்து அடிவாரம் வரை உள்ள இடங்களில் கட்டப்பட்டிருந்த அனைத்து தடுப்பணைகளும் நிரம்பி உபரி நீர் புது ஏரிக்கு அதிகளவில் வந்தது. இதன் காரணமாக ஏரியின் நீர்மட்டமானது கிடுகிடுவென உயர்ந்து வந்தது.
இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு புதுஏரி நிரம்பியது. அதன்பின் உபரிநீர் மறுகால் வழியே வழிந்தோடியது. இந்த நீரானது கொத்துக்காரன் ஓடை வழியே மூக்கனேரிக்கு சென்ற வண்ணம் இருக்கிறது. ஏரி மறுகால் வழிந்தோடியதை முன்னிட்டு கோடிக்கல் முனியப்பனுக்கு கிடா வெட்டி பொதுமக்கள் நேர்த்திகடன் செலுத்தி வழிபட்டனர். புது ஏரி நிரம்பிய தகவல் கிடைத்ததும், சுற்று வட்டார பொதுமக்கள் பெரும்பாலானோர் ஏரியை கண்டு மகிழ்ந்தனர்.