Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ஒரு ஆசையா?…. கையும் களவுமாக சிக்கிய 2 வாலிபர்கள்…. சேலத்தில் பரபரப்பு….!!!!!

சேலம் அரசு மருத்துவமனைக்கு நேற்று 2 வாலிபர்கள் டிப்டாப்பாக உடையணிந்து மருத்துவர் போல் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் அணிந்து வந்தனர். இவர்களை பார்த்த நோயாளிகள் இளம்வயது மருத்துவர்கள் என நினைத்து அவர்களுக்கு வழிவிட்டனர். இதையடுத்து இரண்டு பேரும் கண் அறுவைசிகிச்சை மையத்துக்கு சென்றனர். அதன்பின் அங்கிருந்த நர்சிடம் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் மருந்து மாத்திரைகளின் விபரங்களை கூறும்படி கேட்டனர். இந்நிலையில் நர்சுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக புதியதாக மருத்துவர் பணிக்கு சேர்ந்து உள்ளீர்களா..? என்பது உள்ளிட்ட சில கேள்விகளை கேட்டார். அதற்கு அவர்கள் சரியான பதில் கூறவில்லை என்று தெரிகிறது.

இதனால் மேலும் சந்தேகமடைந்த நர்சு இது  தொடர்பாக மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்திக்கு தகவல் தெரிவித்தார். அதன்பின் அவர் கண் அறுவை சிகிச்சை மையத்துக்கு நேரில் சென்றார். அப்போது டிப்-டாப் ஆசாமிகளை பார்த்ததும் அவர்கள் இரண்டு பேரும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இல்லை என்பது தெரிந்தது. அதனை தொடர்ந்து 2 பேரையும் பிடித்து அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் “கிருஷ்ணகிரி கந்திகுப்பம் பகுதியை சேர்ந்த சல்மான் (23), சேலம் தளவாய்ப்பட்டி அருகேயுள்ள சித்தர்கோவில் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (23) என்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி மருத்துவர் போல் வேடமணிந்து வந்ததும் தெரிந்தது.

அதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதுபற்றி காவல்துறையினர் கூறியதாவது “கைது செய்யப்பட்ட சல்மான், கார்த்திகேயன் இருவரும் 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளனர். இவர்கள் இருவரும் முகநூல் வாயிலாக நண்பர்களாகினர். முகநூலில் பேசிக்கொள்ளும் போது மருத்துவர்கள் போன்று பேசுவதை அவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அத்துடன் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களுக்கு நோயாளிகள் கொடுக்கும் மரியாதையை பார்த்து அதேபோன்று அவர்களுக்கும் நோயாளிகள் மரியாதை கொடுப்பதை காண வேண்டும் என விபரீத ஆசை ஏற்பட்டுள்ளது.

இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவர் போன்று செல்லலாம் என முடிவு எடுத்துள்ளனர். அதன்படி இருவரும் ஆன்லைன் வாயிலாக ஸ்டெதஸ்கோப் வாங்கி அதனை கழுத்தில் அணிந்துகொண்டு நேற்று மருத்துவர்கள் போன்று ஆஸ்பத்திரிக்குள் நுழைந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு நோயாளிகள் பலர் வழிவிட்டு வணக்கம் தெரிவித்துள்ளனர். இதனை பார்த்த அவர்கள் சிரித்தபடி மருத்துவர் என்ற நினைப்பிலேயே கண் அறுவை சிகிச்சை மையத்திற்கு சென்று அங்கு பணியிலிருந்து நர்சிடம் நோயாளிகளுக்கு வழங்கும் சிகிச்சை முறையை கேட்டபோது மாட்டிக்கொண்டனர்” என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Categories

Tech |