அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நடிகையும், பா.ஜனதா மகளிரணி நிர்வாகியுமான சோனாலிபோகத் (42) கோவாவில் சென்ற ஆகஸ்ட் 22ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் அவரது உதவியாளர்கள் இருவரை கைது செய்தனர். இதற்கிடையில் சோனாலி அதிகளவு போதைப் பொருள் பயன்படுத்தி இருப்பதாக பிரேத பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. இந்த மரணம் குறித்து மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.. இதையடுத்து சோனாலி மரண வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற உத்தரவிடும்படி கோவா அரசிடம் கோரிக்கை விடுத்து இருப்பதாக அரியானா முதல் மந்திரரி மனோகர்லால் கட்டார் கூறியிருந்தார். இந்நிலையில் தேவைப்பட்டால் சோனாலிபோகத் மரண வழக்கு விசாரணை சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்படும் என கோவா முதல்மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்து இருக்கிறார். அதன்பின் பனாஜியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சாவந்த், “இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சோனாலியின் குடும்பத்தினர் விரும்புகின்றனர்.
அவ்வாறு சி.பி.ஐ-யிடம் ஒப்படைப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. கோவா காவல்துறையினர் இவ்வழக்கை முழு ஈடுபாட்டோடு விசாரித்து வருகின்றனர். தேவைப்படுமானால் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றுவோம்” என்று கூறினார். அத்துடன் சொத்து தகராறு மற்றும் அரசியல் சதி தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தற்போது சோனாலிபோகத் மரணம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது. அவற்றில் குற்றம் சாட்டப்பட்டவர் தன் கையில் வைத்திருக்கும் பாட்டிலில் உள்ள மதுவை சோனாலி போகத்துக்கு வலுக்காட்டாயமாக கொடுப்பதை காணலாம்.