Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: ஈரோட்டில் சிலைகள் அமைப்பு பணி தீவிரம்…. கொடி அணிவகுப்பு சென்ற போலீசார்….!!!!

ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தியானது கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்து முன்னணி சார்பாக விநாயகர் சிலை அமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோட்டில் 1008 இடங்களில் சிலை வைக்கும் நோக்கத்தில் பல இடங்களிலும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சம்பத்நகரில் 11 அடி உயர வீர விநாயகர் சிலை மூல விநாயகராக பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இதுபோன்று மாநகரில் நூற்றுக்கணக்கான இடங்களில் விநாயகர் சிலை அமைக்க, பந்தல்கள் போடப்பட்டு வருகிறது.

சிலைகள் தயாரிக்கப்பட்ட இடங்களிலிருந்து பிரதிஷ்டை செய்யப்படும் இடங்களுக்கு வாகனங்களில் சிலைகள் கொண்டு செல்லப்படுகிறது. ஈரோட்டில் விநாயகர் சதுர்த்தி மற்றும் சிலை கரைப்பு ஊர்வலங்களை பாதுகாப்புடனும், அசம்பாவிதங்கள் எதுவும் இன்றியும் நடத்த போலீஸ் துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் 1,500க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் அதிகம்கூடும் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விநாயகர்சிலைகள் அமைக்கப்படும் பகுதிகளிலும், ஊர்வலம் போக அனுமதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகர் பகுதியில் காவல்துறை பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக கொடி அணி வகுப்பு நேற்று மாலை நடைபெற்றது. ஈரோடு டவுன் துணைபோலீஸ் சூப்பிரண்டு ஆனந்த குமார் தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில் இன்ஸ்பெக்டர்கள் தெய்வராணி (டவுன்), நிர்மலாதேவி (மகளிர்), சோமசுந்தரம் (தாலுகா), சண்முகம் (வீரப்பன்சத்திரம்), ராஜபிரபு (கருங்கல்பாளையம்) போன்றோர் தலைமையில் அந்தந்த காவல்நிலைய போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் பங்கேற்றனர். ஈரோடு அரசு மருத்துவமனை மேம்பாலம் பகுதியில் துவங்கிய கொடி அணிவகுப்பு, பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, எல்லை மாரியம்மன் கோயில் வழியாக கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் நிறைவடைந்தது.

Categories

Tech |