ஈரோடு மாவட்டம் மொடக் குறிச்சி பகுதியில் நேற்று முன் தினம் இரவு 7 மணிக்கு கனமழை பெய்ய துவங்கியது. இந்த மழை நள்ளிரவு 1 மணிவரை நீடித்தது. இதனால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. அதிலும் குறிப்பாக மொடக்குறிச்சியை அடுத்த 46 புதூர் ஊராட்சி புதுவலசு, கருக்கம்பாளையம், ஆதி திராவிடர் காலனி, கிழக்கு வலவு ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. இதன் காரணமாக அப்பகுதியிலுள்ள 40-க்கும் அதிகமான வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இரவில் வெள்ளம் புகுந்ததால் வீட்டிலிருந்த பொதுமக்கள் செய்வதறியாது திணறினர். அத்துடன் வீடுகளிலுள்ள பொருட்கள் தண்ணீரில் மிதந்து சென்றது.
ஆனைக்கல்பாளையம் பகுதியில் பெய்த கனமழையால் அப்பகுதியை சேர்ந்த வாசுதேவன் என்பவருடைய வீட்டின் முன்புற அறை இடிந்து விழுந்தது. இவற்றில் வாசுதேவன், அவருடைய மனைவி பழனியம்மாள், 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் ஆகியோர் வீட்டின் உட்புற அறையில் உறங்கி கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினா். லக்காபுரம்- கருக்கம்பாளையம் போகும் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கருக்கம்பாளையத்தில் சென்ற ஒரு டிராக்டர் அந்த பகுதியிலுள்ள சேற்றில் வசமாக சிக்கிகொண்டது.
அதனைத் தொடர்ந்து சரக்கு வேன் வாயிலாக டிராக்டரை கயிறுகட்டி இழுக்கும் முயற்சியில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஈடுபட்டனர். மழையால் பாதிக்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 170 பேர் 46 புதூர் பஞ்சாயத்து பகுதியிலுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊராட்சித்தலைவர் பிரகாஷ் காலை, மதியம் மற்றும் இரவு என 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கினார். மேலும் அப்பகுதியில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாமும் நடந்தது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மொடக்குறிச்சி தாசில்தார் சண்முக சுந்தரம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.