Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொடர் மழை!…. ஓடைகளில் பெருக்கெடுத்த மழைநீர்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!!!

ஈரோடு மாவட்டத்தில் சென்ற சில தினங்களாக தொடர்ந்து மழைபெய்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு துவங்கிய மழை அதிகாலை வரை விடாமல் பெய்துகொண்டிருந்தது. ஈரோட்டில் நேற்று காலை நிலவரப்படி 38 மி.மீ மழை பெய்ததாக பதிவாகியிருந்தது. தொடர்ந்து மழைபெய்து வருவதால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. இதனால் பள்ளமான இடங்களில் வெள்ளம் குட்டை போல தேங்கி காணப்பட்டது. ஈரோட்டின் முக்கியமான ஓடைகளாக உள்ள பெரும் பள்ளம், பிச்சைக்காரன் பள்ளம், சுண்ணாம்பு ஓடை, கொல்லம்பாளையம் ஓடை மற்றும் ரங்கம்பாளையம் ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

முன்பே 4 நாட்கள் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வரும் நிலையில் இந்த சாக்கடைகளில் கிடந்த அசுத்தங்கள் அடித்துச் செல்லப்பட்டு, நேற்று மழைநீர் சுத்தமாக ஓடியது. இதுபோன்று நன்நீராக இந்த ஓடைகள் ஓடிக்கொண்டு இருந்ததால் ஈரோடு மாநகர் பகுதியில் சுத்தமான நிலத்தடி நீர் கிடைக்கும். ஆகவே இந்த சூழலை பயன்படுத்தி ஓடைகளிலுள்ள புதர்களை அகற்ற வேண்டும். அத்துடன் கழிவுகள் நீரோடைகளில் கலப்பதை தடுத்து, பாதாள சாக்கடை திட்டத்தை முறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே சமயம் சாலைகளிலும் வெள்ளம் தேங்கி பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

பூந்துறை ரோடு அண்ணமார் பெட்ரோல் பங்க் அருகேயுள்ள ஆட்டோ நிறுத்தம் பகுதியில் சாலையில் தண்ணீர் நிரம்பி பொதுமக்கள் நடந்து போக முடியாத அளவுக்கு மாறியது. இதன் காரணமாக அங்கு உள்ள குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இங்கு சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருப்பதாகவும், மழைநீர் வடிகால்களில் தண்ணீர் போக முடியாத அளவுக்கு அடைப்பு ஏற்பட்டு உள்ளதாலும் இது போன்று பாதிப்பு இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஈரோடு பெரியவலசு மாணிக்கம் பாளையம் சாலையில் தொடர்ச்சியாக பாதாள சாக்கடை தொட்டிகளிலிருந்து கழிவுநீர் கொப்பளித்து வெளியேறியது.

இதன் காரணமாக நடந்து சென்ற பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். கழிவுநீர் காரணமாக துர்நாற்றமும் வீசியது. இதுபோன்று மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் பாதாள சாக்கடை தொட்டிகளிலிருந்து தண்ணீர் கொப்பளித்து வெளியேறியது. அதேபோன்று பூந்துறை ரோடு செட்டிபாளையம் பகுதியில் வீடுகளை சூழ்ந்து வெள்ளம் தேங்கிநின்றதால் அப்பகுதியினர் சிரமப்பட்டனர். பெரிய சேமூர், சோழாநகர் பகுதியிலும் வீடுகளை வெள்ளம்சூழ்ந்தது. ஈரோடு வெட்டுக் காட்டு வலசு பகுதியில் சில வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. ரங்கம்பாளையம் ரயில்வே நுழைவுபாலம், வெண்டிபாளையம் ரயில்வே நுழைவுபாலம், ஆனைக்கல்பாளையம் ஈரோடு ரோடு என பல பகுதிகளிலும் வெள்ளம் குட்டையாக தேங்கியது.

 

Categories

Tech |