மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக மூதாட்டி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அதிகாரிகளிடம் மனுக்களை கொடுத்தனர். அப்போது மனு கொடுப்பதற்காக வந்திருந்த ஒரு மூதாட்டி திடீரென மண்ணெணையை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் மூதாட்டியின் மீது தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றினர்.
அதன் பிறகு காவல்துறையினர் மூதாட்டியிடம் விசாரணை செய்தபோது பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த பத்மா என்பது தெரியவந்தது. இவருக்கு சொந்தமான வீடு ஒன்று சிலேட்டர் நகரில் இருக்கிறது. இந்த வீட்டை வாடகைக்கு விட்டு அதில் வரும் பணத்தை பத்மா வாங்கி வந்துள்ளார். ஆனால் திடீரென பத்மாவுக்கும் வீட்டில் குடியிருந்தவர்க்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் அவரை காலி செய்யும்படி பத்மா கூறியுள்ளார்.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்தால் அந்த நபர் ஒரு வருடம் கழித்து தான் வீட்டை காலி செய்வேன் கூறி வாடகை பணமும் சரிவர கொடுக்காமல் இருந்துள்ளார். இது தொடர்பாக பத்மா பலமுறை காவல்நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் பத்மாவுக்கு திடீரென உடல் நலம் சரியில்லாமல் போனதால் அவர் அடிக்கடி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு பத்மா தற்போது குடியிருக்கும் வீட்டை வீட்டு ஓனர் காலி செய்யும்படி கூறுவதால், அவருக்கு வேறு எங்கு செல்வது என்று தெரியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்.
இதனையடுத்து பத்மா செல்லும் மருத்துவமனை அவர் வாடகைக்கு விட்டிருக்கும் வீட்டின் அருகே இருப்பதால் அங்கு சென்றால் மருத்துவமனையில் செல்வதற்கும் வசதியாக இருக்கும் என்று நினைத்து அந்த வீட்டின் அருகே ஒரு குடிசை போட்டு இருப்பதற்கு முடிவு செய்துள்ளார். ஆனால் வீட்டில் குடியிருந்த நபர் பத்மாவை குடிசை வீடு போட விடாமல் தடுத்ததோடு அவரை மிரட்டியுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இது தொடர்பான புகார் மனுவை பத்மா மாவட்ட வருவாய் துறை அதிகாரியிடம் வழங்கினார். மேலும் வாரம் தோறும் நடக்கும் பொது மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது தீக்குளிக்கும் முயற்சி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதால் பாதுகாப்புக்காக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டும் தீக்குளிக்கும் சம்பவம் நடைபெறுவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.