வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் தற்கொலை என்பது சிலருக்கு மிகவும் சாதாரணமாகிவிட்டது. பள்ளி படிக்கும் மாணவர்கள் முதல் வாலிபர்கள், திருமணமானவர்கள் என பல்வேறு நிலையை கடந்தவர்களும் ஏதாவது ஒரு பிரச்சனையை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த தற்கொலை என்பது ஒரு பிரச்சனைக்கு தீர்வு கிடையாது. தற்கொலை என்பது மிகவும் கோழைத்தனம். ஒரு பிரச்சனை வந்தால் தற்கொலை செய்வதற்கு பதிலாக அந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க வேண்டும் அதிலிருந்து எப்படி வெளியே வரவேண்டும் என்பதை தான் யோசிக்க வேண்டுமே தவிர உயிரை மாய்த்துக் கொள்வது புத்திசாலித்தனம் இல்லை.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி பகுதியில் பாலச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினிஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கேபிள் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்னும் சிறிது நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் வினிஷ் திடீரென விஷம் குடித்த நிலையில் சுடுகாட்டில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து பூதபாண்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட வாலிபர் மீது கடந்த 2013-ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு பதிவாகியுள்ளது. அதன் பின் ஜாமினில் வெளியே வந்த வாலிபர் சாட்சியங்களை கலைக்க முயற்சி செய்ததாக கூறி மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நெல்லை மாவட்ட காவல்நிலையத்திற்கு தினந்தோறும் வினிஷ் கையெழுத்து போடுவதற்காக சென்று வந்துள்ளார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த வினிஷ் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்திருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.